தமிலல்ல தமிழ்
ஒன்றாம் வகுப்பு முதலே சொல்கிறேன் தமிழாசிரியர்கள் எனக்கு பிடித்தமான ஆசிரியர்களாக இருந்ததில்லை. காரணம் தமிழ் என்பது ல ழ ள உடன் தொடர்பு கொண்டதாக இருக்கிறது. ண ன ந பிரித்தறிய வேண்டியிருக்கிறது. ங ஞ இதன் வித்தியாசம் நாக்குக்குத் தெரிந்திருக்க வேண்டியதாக இருக்கிறது. நாக்கு நாம் சொல்வதையா கேட்கிறது?
தமிழ் என்னை மெல்ல தள்ளு வண்டியில் தள்ளிவந்து கல்லூரியில் கொண்டுவந்து நிறுத்தியது. இங்கே எனக்கு தமிழாசியராக அம்மா நா. விஜயலெட்சுமி அவர்கள் கிடைத்தார். மொழியின் அழகு உச்சரிப்பதை விடவும் அந்த உச்சரிப்புக்குள் மறைந்திருந்து வெளிப்படும் ஒலிப் பதத்தில் இருக்கிறது என்பதை நான் முதன்முறையாக உணர்ந்தேன். எனக்குக் கிடைத்த முதல் பெண் தமிழாசிரியர் அம்மாதான். "என்ன ராஜசமாணிக்கம்?" என்பார். ஜ ஒலிப்புக்குள் 'ச'வும் மறைந்திருந்து ஒலிக்கும். இதுதான் இவரது தமிழ்.
கல்லூரியில் படிக்கையில் மாநில அளவிலான ஒரு பேச்சுப்போட்டிக்கு கல்லூரி என்னை முன்மொழிந்தது. தலைப்பு நபிகள் நாயகம். பேராசியர் முகமது கான் அவர்கள் என்னிடம் இஸ்லாம் சார்ந்த நூல்களைக் கொடுத்து உரை தயாரிக்கச் சொன்னார். நான் கம்பராமாயணம் கடவுள் வாழ்த்திலிருந்து உரையைத் தொடங்கி இயேசு காவியம் பாடலில் முடிக்கும் படியாக எனது உரையைத் தயார் செய்தேன். இதற்குள் இருந்தார் நபிகள் நாயகம்.
வகுப்பு மாணவர்களுக்கு முன்பு என் உரையை நிகழ்த்திக் காட்டினேன். மாணவர்கள் கைகொட்டிப் பாராட்டினார்கள். அம்மா என் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு அவரது அறைக்குச் சென்றார். தலையில் ஒரு கொட்டு. என்ன உச்சரிக்கிறாய் நீ? ழ வை ள என்கிறாய். ந வை ண என்கிறாய். இதுல உனக்குக் கைத்தட்டல் வேற? நீ தமிழ் பேசுவதைக் கேட்டால் சிரிப்புதான் வருது என்றவர் என் ஒலிப்பு முறைகளை திருத்தினார். இதில் நடந்த அதிசயம் என்ன தெரியுமா? தவறாக உச்சரித்துப் பழகிய நாக்கு வெட்கப்படாமல் திருத்திக்கொண்டதுதான். இந்த திருத்தம் அம்மாவால் நிகழ்ந்தது. தமிழ்த்தாயால் நிகழ்ந்தது.
இன்னொன்றையும் சொல்லிவிடுகிறேன். எனது வகுப்பில் குழந்தை கதையொன்று எழுதச் சொல்லி கேட்டார். நான் ஒரு கதை எழுதி அம்மாவிடம் கொடுத்தேன். அவர் என்னை தனியே அழைத்து "உனக்கு ஒலிப்புதான் பிரச்சனைன்னா எழுதுவதிலும் பிரச்சனைதான். எழுதியிருப்பது நான்கு வரி. அதில் நான்கு தவறு " என்று என் கதையில் முட்டை முட்டையாக எழுத்துகளை வட்டங்கட்டினார். " நீ எழுதிய கதையை நீயே பாரு" என்றார். அம்மா சுட்டிக்காட்டும் பிழைகளில் வருத்தப்பட இடமிருக்காது. இது அவரது மொழிதலின் வலிமை.
கதையில் நான் செய்த தவறு நரிறை நறி என்றும் பரியை பறி என்றும் பறித்தான் என்பதை பரித்தான் என்றும் எழுதியதுதான். இந்தப் பிழைகளைத் திருத்திக்கொள்வதற்குத் தொடர்ந்து வாசிக்க வேண்டியிருந்தது. எழுதிபார்க்க வேண்டியிருந்தது.
நிற்க.
மார்ச் 31 அன்று புதுக்கோட்டையில் நடைபெற்ற 142 ஆவது வீதி கலை இலக்கிய களத்தில் பார்வையாளனாக கலந்துகொண்டேன். அம்மா நா.விஜயலெட்சுமி அவர்கள் 'குழந்தைகளும் ஆசிரியரும்' எனும் தலைப்பில் உரையாற்றினார். அவரது உரையில் என் பெயரைச் சொல்லி, "எனது பிள்ளை இன்று தி இந்து தமிழ் திசையில் தொடர்ந்து எழுதுகிறான். அவன் பெரியளாகிவிட்டான் என்னிடம் பேச மாட்டேங்கிறான்" என்று சொல்லி கொட்டும் அன்புடன் புளகாங்கிதம் அடைந்தார். நான் கைக்கட்டியவனாய் அமர்ந்திருந்தேன். எல்லாரும் கைகொட்டி ரசித்தார்கள்.
உரை முடிந்ததும் அவருக்கு நினைவு பரிசு வழங்க ஆட்களைத் தேடுகையில் கவிஞர் நா.முத்துநிலவன் மற்றும் தங்கம் மூர்த்தி இருவரும் சுராவை அழைத்தே நினைவு பரிசு கொடுங்கள் என்றார்கள். நான் பரிசு கொடுப்பதற்கு முன்பாக அம்மாவிடம் ஆசி பெற்றுக்கொண்டு நினைவு பரிசு வழங்கினேன்.
இந்த இடத்தில் இன்னொரு தாய் குறித்து சொல்லியாக வேண்டும். இந்த நிகழ்வின் தலைவர் அம்மா ஜெயலெட்சுமி அவர்கள். இவர் ஓய்வு பெற்ற கல்வி அலுவலர்.
இவர் பேசும் தமிழை நான் எப்படி பார்ப்பேன் தெரியுமா? ஒரு குழந்தை நொறுக்குத் தீனி தின்னுகையில் பக்கத்துக் குழந்தை அதை எப்படிப் பார்க்கும்? அப்படி பார்ப்பேன். அன்றும் அப்படித்தான் பார்த்திருந்தேன். கொஞ்சும் தமிழ் இவருடையது. நிறைய கவிதைகள், பொருத்தமான கவிதைகளோடு நிகழ்வை அழகாக்கினார். தாய்த்தமிழ் தாய்த்தமிழ்தான்!
மொத்தத்தில் இந்த நிகழ்வு எப்படி இருந்தது என்பதைப் பற்றி இங்கே சொல்லியாக வேண்டும். நிகழ்வுக்கு ஒரு வணிகர் அம்மா தேநீர், வடை கொண்டுவந்தார். அவரே எல்லாருக்கும் பகிர்ந்தார். அதற்கானத் தொகை அப்பொழுதே கொடுக்கப்பட்டது. அதை வாங்கிக்கொண்ட அவர் அங்கேயிருந்து வெளியேறியிருக்க வேண்டும். கூடை, பாத்திரத்தை ஓரங்கட்டிவிட்டு நாற்காலியில் அமர்ந்துவிட்டார்.
வீதி 150 நெருங்கிக்கொண்டிருக்கிறது!



கருத்துகள்
கருத்துரையிடுக