வாதமும் விவாதமும்

இந்த வார(15.04.2026) ஆனந்த விகடன் இதழ் இரு புதுக்கோட்டை எழுத்தாளர்களின் அகம், புறங்களைத் தாங்கி வந்திருக்கிறது. கவிஞர் துவாரகா சாமிநாதனின் கவிதை, கவிஞர் நா.முத்துநிலவனின் நேர்காணல்.


"கவிதை  என்பது அகம் சார்ந்த வாதம்; நேர்காணல் என்பது புறம் சார்ந்த விவாதம்." இது எனது புரிதல், பார்வை, கருதுகோள்.




துவாரகா சாமிநாதன் வாழ்க்கை எனும் தலைப்பில் ஒரு கவிதையைத் துவைத்து  இஸ்திரி செய்திருந்தார். உண்மையில் அதுவொரு சிறுகதை. அதைத்தான் அவர் கவிதைக்குள் அத்தனை அழகாக அடைத்திருக்கிறார். சலவைக்கடைக்காரரும் அவரது மனைவியும் ஒரு வேட்டியைக் கும்மித் துவைக்கிறார்கள். பிறகு சுருக்கத்தைப் போக்க ஆளுக்கொரு பக்கமாக இழுக்கிறார்கள். வேட்டி ஒரு பக்கம் உயர்ந்தும் தாழ்ந்தும் போகிறது. சுருக்கம் போகவில்லை. மனைவி வேட்டியில் தண்ணீர்த் தெளிக்கிறார். கணவர் தேய்க்கிறார். சுருக்கங்கள் துன்பத்திலிருந்து மீண்டு வாழ்வு ஆகிறது.

கவிதை என்பது பூப்போட்ட கைக்குட்டை என்று நினைத்துவந்தேன். வேட்டியும்தான் என்று சொல்லி நிற்கிறது கவிதை. கவிதையை  இதழில் வாசித்து  அனுபவியுங்கள்.


கவிஞர் நா.முத்துநிலவன் அவர்களின் நேர்காணலுக்கு வருகிறேன். அவரது உரையை அதிகம் வாசித்தவன் என்கிற முறையிலும் அவரது எழுத்தை தொடர்ந்து கேட்கிறவன் என்கிற முறையிலும் அவரது எழுத்து , உரை  குறித்து நானொரு புரிதல் கொண்டுள்ளேன். இவர் எழுதுவதைப் போலவே பேசுவதும் பேசுவதைப் போலவும் எழுதவும் செய்கிறவர்.  அவரது உரையும் எழுத்தும் இலக்கணம் வகுப்பெடுக்கும். இந்த நேர்காணலும் அப்படியாகவே இருந்தது.




நேர்காணலை வாசித்து சில மணி நேரமிருக்கும். புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட ஒரு வட்டாட்சியர் அழைத்தார். "தோழர் ஒரு சந்தேகம். ஏர் இருக்கிறது அல்லவா ஏர், அதாவது உழவு "

" ஆமாம் தோழர்"

"அதை ஏ இர் அதாவது கால்வாங்கு போட்டு புள்ளி வைத்தால் தவறா?"

கேள்வியை வியந்தேன். வட்டாட்சியர் இந்த வார ஆனந்த விகடனில் கவிஞர் முத்துநிலவனின் நேர்காணலை வாசித்திருக்கிறார் என்று. அவரது கேள்விக்கான பதிலை விளக்கினேன்.

"எனது பெயரையே துணையெழுத்து மீது புள்ளி வைத்தே எழுதி வருகிறேன்" என்றவர் " மாற்றிக்கொள்கிறேன் " என்றார்.

நல்ல தமிழாசிரியர் பணிக்காலத்தில் மாணவர்களுக்குத் தமிழ் நடத்துகிறார். ஓய்வுக்குப் பிறகு இலக்கணம் நடத்துகிறார். இதையே தோழர்  நா.முத்துநிலவன் செய்துவருகிறார்.

இந்த நேர்காணலில் புதுக்கோட்டை கீழராஜவீதி,  அறிவொளி இயக்கம், தமுஎகச, கணினித் தமிழ்ச்சங்கம் இத்தோடு வீதி கலை இலக்கிய களம் இடம் பெற்றிருந்தது. என் அளவீட்டில் புதுக்கோட்டையில் இயங்கிவரும் எத்தனையோ கலை இலக்கிய அமைப்புகளில் வீதி கலை இலக்கிய களம் தனித்துவமானது. அதற்குக் காரணம் அந்த களம் தன்னகத்தே கொண்டுள்ள தலைமைத்துவமில்லாத முதன்மைத்துவம். விகடனில் வீதி இடம்பெறுவது இதுவே முதன்முறை என்று நினைக்கிறேன். வாழ்த்துகிறேன்.

நேர்காணலில் இரண்டு விசயங்கள் குறித்து சொல்லியாக வேண்டும்.  ஓரிடத்தில் சொல்கிறார் நிலவன், "இலக்கணம்ங்கிற இழையிலதான் மொழி காலத்தைத் தாக்குப்பிடிச்சு நகரும்." இலக்கணம் தமிழுக்கு வேர், ஆதாரம் என்பதாக பார்ப்பது மரபு. இவர் இழை என்கிறார்.

இழை என்பது கண்ணுக்குத் தெரியாதது. இவர் சொல்லும் இழையை நான் இப்படியாக கற்பனை செய்து பார்க்கிறேன். சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் இருப்பது என்ன? எது பூமி சூரியனைச் சுற்றி வர பணிக்கிறது. கண்ணுக்குத் தெரியாத அக, புற விசைகள். இவைதான் இழைகள்.

தமிழுக்கு  இலக்கணம் என்பது இப்படியான  இழைதான். இவரது நேர்காணலில் இப்படியான ஒப்பீடு  புதுமையானது.

தமிழ் இலக்கணம் என்கிற இழையில்தான் வாழ்கிறது என்பதற்கு இந்த நேர்காணலுக்கு ஆனந்த விகடன் கொடுத்திருக்கும் தலைப்பை உதாரணப்படுத்துகிறேன்.

நான்கு  தலைப்புகள் தருகிறேன். இவற்றில் ஒன்று ஆனந்த விகடன் கொடுத்திருப்பது. மற்றவை தமிழின் இழைகள்.

1. மொழி தமிழாசியர்களுக்கு உரியது அல்ல...அது மக்களுக்கு உரியது!

2. மொழி தமிழாசிரியர்களுக்கு உரியது மட்டும் அல்ல...அது மக்களுக்கு உரியது!

3. மொழி தமிழாசிரியர்களுக்கு உரியது மட்டும் அல்ல...அது மக்களுக்கும் உரியது.

4. மொழி தமிழாசிரியருக்கு உரியது அல்ல...அது மக்களுக்கும் உரியது.


11.04.2026  நேரம் - 8.55


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்