நாம் ஏன் மக்களை வாசிக்க வில்லை

திமுக அரசு அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று நம்பினேன்.  எனது நண்பர்களுடன் இது குறித்து உரையாடுகையில் அவர்கள் என்னை கேலி செய்தார்கள் . " முதல்ல நீ கதை புக் வாசிக்கிறத விட்டுட்டு மக்களை வாசி." அடுத்து எழுத்தாளர் நண்பருக்கும் எனக்குமிடையில் நீண்ட நேர வாக்குவாதம்,  நான் திமுக 180+ தகுதிக்கு மேல் ஆட்சி அமைக்கும் என்று எனக்குத் தெரிந்த புள்ளியியல்,  நிகழ்தகவு கணக்குகளைக் கொண்டு விளக்கினேன். அவர் நீங்கள் நினைப்பது மாதிரி இல்லை.இந்த அரசு மீது மிகக்கடுமையான அதிருப்தி நிழவுது என்றார்.


தேர்தல் முடிந்த மறுநாள் என் அத்தை ஓடிவந்து என்னிடம் கேட்டார், "தம்பி விசில்தான் ஜெயிக்குமுனு பேசிக்கிறாங்க, எதுப்பா ஜெயிக்கும்? " நான் என் மேதாவித்தனத்துடன் சிரித்தவனாய் நகர்ந்தேன். ஓட்டும் எண்ணும் நாளுக்கு முதல் நாள் அங்காடிக்கு அரிசி வாங்க சென்றேன். "நான் வாங்க போற கடைசி திமுக அரிசி இதுதான். அடுத்த மாதம் விசில் அரிசி " என்றார் ஒருவர். அவர் சொன்னதுக்கு இரண்டு பேர் சிரித்தார்கள். மூன்று பேர் ஆமாம்மாம் என்றார்கள்.

இவர்கள் படிக்காதவர்கள் , பாமரர்கள் என்பதாக கடந்தேன்.

வீட்டில் அம்மாவிடம் கேட்டேன். " யாருக்கும்மா ஓட்டுப் போட்டே.  எனக்குப் பிடித்தமான சின்னத்தை சொன்ன அம்மா சிரித்து வைத்தார் " தம்பி மனைவியிடம் கேட்டேன். " நான் விசிலுக்குத்தான் போட்டேன் " என்றார்.

தேர்தலுக்கு முன்பொரு நாள் ஒரு வயோதிக அம்மா என் வாகனத்தைத் தேக்கி நானும் வருகிறேன் என்றாள். ஏற்றிக்கொண்டேன். யாருக்கும்மா ஓட்டுப் போடப்போறீங்க என்றேன். என் பேத்தி விசிலுக்குப் போடச் சொல்றாள் என்றார்.

இப்படி விசில் என் காதினிலும் அதிகம் ஒலித்தும் திமுக வெல்லும் என்று நான் நம்பியது எனது விருப்பமாகவே இருந்துள்ளதே தவிர களநிலவரம் அப்படியாக இருந்திருக்கவில்லை.

வாக்குகள் எண்ணும் நாளன்று பாலிமர் தொலைக்காட்சியில் முதல் அறிவிப்பாக விஜய் முன்னிலை என்று அறிவிப்பு வந்தது. தந்தி தொலைக்காட்சிக்கு மாறினேன். தபால் வாக்குகளில் விஜய் முன்னிலை என்றது. இந்த முன்னிலை பிறகு இறங்கு முகம் காணவில்லை. கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் பின்னடைவு என்று அறிவித்தார்கள். நான் அதிர்ச்சி கொள்ளவில்லை. காரணம் பிரதமர் நரேந்திர மோடியும் வாரனாசி தொகுதியில் பின்னடைவு சந்தித்து ஏறுமுகம் கண்டார். அப்படியாக ஸ்டாலின் ஏறுமுகம் காண்பார் என்று நினைத்தேன். இறங்கு முகம் அவரது முகமாகிப் போனது.

மு.க.ஸ்டாலின் தேர்தல் தோல்வியை இந்திய அரசியலை அவதானிக்கும் யாரும் ஏற்கமாட்டார்கள்.  அவரது இந்த தோல்வி எதிரி அல்லது எதிர்கட்சியினரால் பெரியளவில் கேலிக்கும் கொண்டாட்டத்திற்கும் உள்ளாகாமல் போனதற்குக் காரணம் காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை,  பாரதிய ஜனதா கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் என்று தலைவர்கள் பலரும் இத்தேர்தலில் தோல்வி அடைந்தார்கள். இப்படியான தோல்வி தமிழக தேர்தல் களத்திற்கு புதிது.

மு.க.ஸ்டாலினை தோற்கடித்த வி.எஸ். பாபு முன்னாள் திமுகக்காரர் என்பதும் இவர் ஸ்டாலினுக்கு நம்பிக்கை பாத்திரமானவர் என்பதும் சேகர்பாபுவால் அக்கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர் என்பதையும் அறிகையில் இன்னும்கூட ஸ்டாலின் தேர்தல் தோல்விக்காக கவலைப்பட வேண்டியிருந்தது.

மு.க.ஸ்டாலின் நன்கு ஆட்சி செய்தார் என்பதும் நல்லாட்சி கொடுத்தார் என்பதிலும் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. அவரது ஆட்சியில் நான் விரும்பாதது தினக்கூலி உயர்வுக்காக,  இன்னும் பல கோரிக்கைகளுக்காக தொழிலாளர்கள் போராடுகையில் அவர்களை அவர் கையாண்ட விதம் அவரை நேசித்த பலரையும் முகம் கோண வைத்தது.

ஒரு முறை ஒரு போராட்டக்களத்தில் ஒரு போராட்டக்காரர் சொன்னார், " எதிர்கட்சியாக இருக்கும் பொழுதுதான்  நீங்கள்  சிறப்பாக செயல்படுவீர்கள் என்றால் வரும் தேர்தலில் எதிர்கட்சியினராக அமர்த்திவிடுவோம் " என்று. இந்த சப்தம் கேட்க அன்று மனதிற்கு கஷ்டமாக இருந்தது. அது வேறொரு விதமாக நடந்து விட்டது.

உளவுத்துறை,  அருகமை அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகளை அவர் நம்பிய அளவிற்கு மக்களின் முகத்தை அவர் கவனிக்க தவறிவிட்டார்.

இந்த தேர்தல் முடிவு குழந்தை, இளைஞர்களை படுகொண்டாட்டத்தில் ஆழ்த்தியிருக்கிறது. விஜய் வெற்றியின் தொடர்ச்சியில் அவர் ஆட்சி அமைக்க எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் 118 எண் குறித்தும் அவ்வளவாக இவர்களுக்குத் தெரியவில்லை.

திராவிட கட்சிகளுக்கு மாற்று தேவைதான்.  மாநிலம் இதை மிக நீண்ட காலம் எதிர்பார்த்ததுதான். மக்கள் அரசியல்படுத்தப்பட்டு  இந்த மாற்றத்தை நிகழ்த்தியிருந்தால் நல்லதுதான். இல்லையேல் யாரோ சிலருக்கு மட்டுமேயான நல்லதாகி மாநிலத்தின் நிலைத்தன்மை குலைய வாய்ப்பு அதிகம். அதேநேரம் அமையப்போகும் புதிய அரசை குறைத்து மதிப்பிட வேண்டியது இல்லை.

தேர்தல் முடிவின் மறுநாள் நான் விரும்பி வாங்கும் தினசரி தினத்தந்தி. இன்றும் வாங்கினேன். 234 தொகுதிகளின் வெற்றி , தோல்வி , வாக்கு வித்தியாசத்துடன் கூடிய செய்தி வெளியாகியிருந்தது.

அந்த இதழில் ' பலமாக ஒலித்த விசில் சத்தம்' எனும் தலைப்பில் ஒரு தலையங்க கட்டுரை எழுதப்பட்டிருந்தது. அந்தக் கட்டுரை கே.பி.சுந்தராம்பாள் பாடலோடு இவ்வாறு தொடங்கியது.

"இவன் போட்ட கணக்கொன்று. அவள் போட்ட கணக்கொன்று. இரண்டுமே தவறானது. யார் போட்டோ புதிருக்கோ இருவரும் விடையாகி நின்றதே முடிவானது."

யாரோ போட்ட புதிரல்ல இது. மக்களின் புதிர். மக்களாட்சி மகத்துவத்தில் மாட்சிமைக்குரியவர்கள் மக்களே!

புதிய ஆட்சி தரப்போகும் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் ஜோசப் விஜய் அவர்களுக்கு இனிய வாழ்த்துகள் !! இனி அவர் மாண்புமிகு என்று அழைக்கப்படுவார். இச்சொல் முதலில் காமராசர் அவர்களின் பெயருக்கு முன்பு வடிக்கப்பட்டது. இனி ஜோசப் விஜய் அந்த அடைமொழியோடு அழைக்கப்படுவார்! வாழ்க!!






கருத்துகள்

பிரபலமான இடுகைகள்