பூக்கடையில் அரசியல் பேசாதீர்கள்
இன்று ஒரு மாநகரப் பேருந்து நிலையம் நுழைவு வாயிலிடத்திலிருந்த ஒரு பூக்கடையில் பூ வாங்கினேன். போலீஸ் பந்தோபஸ்து அதிகமாக இருந்தது. இருபுறமும் கட்சிக்கொடிகள் பறந்தன. காலையில் செய்தித்தாள்களில் தலைவர்கள் இன்று - நிகழ்ச்சி நிரலில் எந்தெந்த தலைவர்கள் எந்தெந்த ஊர்களில் பிரச்சாரம் செய்கிறார்கள் வாசித்த ஞாபகம் வர, போக்குவரத்தை ஒழுங்குபடுத்திய ஒரு போலீஸாரிடம் விசாரித்தேன், "தலைவர் வந்துவிடுவாரா, லேட்டாகுமா?"
" பிரச்சாரம் முடிந்தது. கிளம்பிவிட்டார். இன்னும் பத்து நிமிசத்துல இந்த இடத்த கடப்பார் "
தலைவரைப் பார்த்துவிட காத்திருந்தேன்.
பூக்கடை அம்மா பூவை ஒரு துண்டு வாழை இலையில் வைத்து சுருட்டி என்னிடம் கொடுத்தவராய் சொன்னார், " எனக்குத் தெரிஞ்சு இந்த வழியே அவர் எப்படியும் இருபது முப்பது தடவை போயிருப்பார். எத்தனையோ தடவை அவருக்கு நான் டாட்டா காட்டியிருக்கேன். ஒரு நாளும் அவர் சாலையோர கடைகளைப் பார்க்கவோ, தலையை ஆட்டியதோ இல்லை. அட கையெடுத்து கும்பிட வேணாம். டாட்டா காட்ட வேணாம். சிரிக்க வேணாம். ரெண்டு புறமும் நிற்கிற மக்க, கடை, கண்ணிகளை பார்க்கலாம்ல."
" வேறு என்ன செய்வார்?"
"செல்லுல வச்சக்கண்ண எடுக்காம பார்த்துக்கிட்டு போவார்" என்றவராய் பூ கட்டத் தொடங்கினார்.
ஒரு பூக்கடை அம்மா இந்தளவுக்கு ஒரு தலைவரை அவதானிப்பது எனக்கு வியப்பாக இருந்தது. அவர் சொன்னது சரிதானா என்று சோதிக்க தலைவர் வருகைக்காக காத்திருந்தேன். ஒன்றன் பின் ஒன்றாக வாகனங்கள் கடந்தன. பூக்கடை அம்மா சொன்னபடிதான் தலைவர் கடந்து கொண்டிருந்தார்.
ஒரு காலத்தில் டீக்கடையில்தான் இப்படியான அரசியல் பேசப்படும். இப்பொழுது பூக்கடையில்,,,




கருத்துகள்
கருத்துரையிடுக