பேரறிஞர் அண்ணா கிலோ எவ்வளவு?
பேரறிஞர் அண்ணா கிலோ எவ்வளவு?
நான் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கையில் தமிழ் துணைப்பாடத்தில் முதல் கதையாக இடம் பெற்றிருந்த சிறுகதை 'செவ்வாழை'. இந்தக் கதையை தமிழய்யா திரு. கோவிந்தராஜ் அவர்கள் ரசித்து உருகி நடத்துவார். இந்தக் கதையில் என்ன இருக்கிறது, ஏன் இப்படி உருகுகிறார் என்று யோசிப்பேன்.
எனக்கு அப்பொழுது கதை புரிந்தது. கதை தரும் உணர்வை என்னால் உணர முடிந்ததில்லை. கல்லூரி காலத்தில் இந்தக் கதையைத் திரும்ப வாசிக்கையில் இந்தக் கதைக்குளிருக்கும் ஆண்டான் அடிமை, பண்ணையார் மனோபாவம், உழைப்புச் சுருண்டல்,..என பலவற்றை உள்வாங்கிக்கொண்டேன்.
இதன்பிறகு செவ்வாழை எங்கேனும் விற்கக் கண்டால் "பேரறிஞர் அண்ணா எவ்ளோ?" என்று கேட்பேன். அவர்களுக்குப் புரியாது. "செவ்வாழை என்ன சொல்லுது" என்பேன். அவர்கள் விலையைச் சொல்வார்கள். வாங்கிக்கொள்வேன்.
இன்று தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் பெரியார் சிலைக்கும் அருகில் என் வயதுடைய ஒரு சகோதரி செவ்வாழை விற்றுக்கொண்டிருந்தார். வழக்கம் போலவே கேட்டேன், " பேரறிஞர் அண்ணா எவ்ளோ?"
அவர், " ஒன்றரை கிலோ நூறு உரூபாய் " என்றார்.
"அரை கிலோ வேணும்"
" காயா, பழமாகவா?"
" காயாக கொடுங்க "
வாங்கிக்கொண்டு திரும்புகையில் என்னை அழைத்து கூடுதலாக ஒன்று கொடுத்தார். ஏன் என்பதைப் போல பார்த்தேன். " செவ்வாழை நானும் வாசித்திருக்கிறேன்" என்றார்.
நடக்கையில் கதையை மனதிற்குள் அசைபோட்டேன். கதையின் உழைப்புச் சுருண்டல் நினைவுக்கு வந்தது.
திரும்பிச் சென்று என்னிடமிருந்த பத்து ரூபாய் நாணயத்தை நீட்டினேன். அவர் அதை வாங்கத் தயங்கியவர் நாணயம் புதிய பத்து ரூபாயாக இருந்ததாலோ என்னவோ அதை வாங்கி உள்ளங்கையில் இறுக்கிக்கொண்டார்.
நாணயம் என்றால் காசு என்று எனக்கு முன்னமே தெரியும். நாநயம் என்பதே நாணயம் என்றானது. அதன் பொருள் என்ன என்பதை இன்று நான் எனக்கு நானே உணர்த்திக்கொண்டேன்.




கருத்துகள்
கருத்துரையிடுக