மிக வேகமாக எழுதிக்கொண்டிருந்த காலம் அது

2018 ஆம் ஆண்டு எழுதி காக்கைச் சிறகினிலே இதழ் வழியே கவிஞர் கி.பி. அரவிந்தன் நினைவாக நடத்தப்பட்ட உலகளாவிய குறுநாவல் போட்டியில் முதல் பரிசும் நூல் பாரதி புத்தகாலயம் வழியே வெளிவந்ததன் பிறகு நூலுக்கு ஆதரவும் மிக கடுமையான விமர்சனமும் கண்ட கொங்கை எனும் நாவல்  எனது கைவசம் ஒரு பிரதி கூட இல்லை. ஆயினும் இந்த நாவல் கைவசம் இருக்கிறதா என்று கேட்கும் வாசக நண்பர்களை தொடர்ந்து நான் சந்தித்து வருகிறேன். ஏறக்குறைய அப்படியொரு நாவல் எழுதி அதற்கு பரிசும் விமர்சனமும் பெற்றிருக்கிறேன் என்கிற மனநிலையிலிருந்து விலகி மிக நீண்ட தூரம் வந்துவிட்டேன் அல்லது இந்த நாவலுக்குப் பிறகு பெரிதாக எதையும் எழுதிவிட வில்லை, என்கிற மனநிலையில் தேங்கியும் ஓடியும் கொண்டிருக்கும் நிலையில் இன்று இரவு அலைபேசி வழியே உரையாடுகையில்  எஸ்.உதயபாலா உங்களது கொங்கை நாவல் குறித்து எழுதியிருக்கிறார் என்று தோழர் எஸ்.பாலஜோதி ராமச்சந்திரன் சொன்னதும் முகநூல் பக்கம் சென்று நாவல் குறித்த விமர்சனத்தை வாசித்தேன். எஸ்.உதயபாலா வாசிப்பு வரைக்கும் விஜியும் சுஜியும் சந்திரா டீச்சரும் சென்றிருக்கிறார்கள். இவர் மூலமாக மேலும் பலரை இவர்கள் சென்றடைகிறார்கள் என்கிற சிறு சந்தோசம் உறக்கத்திற்கு முந்தைய இரவு என்னை ஆட்படுத்தியிருக்கிறது. இன்றைக்கு எழுதுவதை விடவும் வேகமாக எழுதிக்கொண்டிருந்த காலம் அது. நன்றி - எஸ்.உதயபாலா.

இனி இந்நூல் குறித்த விமர்சன பார்வையை  நீங்களும் எதிர்கொள்ளுங்கள்.

கொங்கை (2018) - அண்டனூர் சுரா

விமர்சனம் - எஸ்.உதயபாலா

​"இப்படியெல்லாம் கூட நடந்திருக்குமா!" எனக் கடந்து போகின்ற படைப்பல்ல, அண்டனூர் சுரா அவர்களின் "கொங்கை" குறுநாவல். எழுத்தாளர் அண்டனூர் சுரா அவர்கள் தம் கதை குறித்த என்னுரையில் எழுப்பிய சந்தேகத்திலிருந்தே எனது விமர்சனத்தைத் தொடங்குகிறேன்.
​இந்தக் கதையைப் படித்த பிறகு, எனக்குள் எந்தக் கேள்வியும் எழவில்லை! மாறாக, பெண்மையின் வழி நின்று அவர்களின் உணர்வோடு ஒன்ற முடிந்தது.

​"இப்படியெல்லாம் பெண்களுக்கு நடக்குமா?" என நான் எந்த மருத்துவரிடமும் சந்தேகக் கேள்விகளை எழுப்பப் போவதில்லை. ஏனெனில், காலநிலை மாற்றமும் உணவுப் பழக்கவழக்கங்களும் மாறியுள்ளன. இதனால் மனித உடலின் தன்மையும் மாற்றம் கண்டுள்ளதை அனைவராலும் புரிந்துகொள்ள முடியும். இன்றைய சூழலில் 4-ஆம் வகுப்பிலிருந்து 6-ஆம் வகுப்பு படிப்பதற்குள்ளாகவே பெரும்பாலான பெண் குழந்தைகள் பூப்பெய்தி விடுகிறார்கள்.

​கதையோட்டத்தில் வரும் விஜி என்ற சிறுமி கதாபாத்திரம், ஆண்-பெண் வேற்றுமைகளை அறிவு ரீதியாக உடைத்தது மட்டுமல்லாது, "ஆண்கள் ஏன் பூப்பெய்துவதில்லை? அவர்களுக்கு ஏன் சடங்கு செய்து வீட்டு மூலையில் உட்கார வைப்பதில்லை?" என்று எழுப்பும் கேள்விகள் ஆண் சமூகத்தின் மீது விழுந்த சம்மட்டி அடியாகவே பார்க்கிறேன். இந்தச் சடங்குகள்தான் ஆணுக்கு ஒரு நியதி, பெண்ணுக்கு ஒரு நீதி என ஓரவஞ்சனை காட்டி, ஏற்றத்தாழ்வான சமூகத்தை உருவாக்கி வைத்திருக்கின்றன.

​இந்த இந்து நடைமுறைகளும் சடங்குகளும் பெரும் சமூகத்திற்கும் ஆண்களுக்கும் ஆதரவாக இருப்பதால், அவர்கள் இதை விரும்புகிறார்கள்; தக்கவைக்கவும் நினைக்கிறார்கள். நீங்கள் கதையைப் பெண்களின் வழி நின்று, அவர்கள் அனுபவிக்கும் வலியை எழுதிவிட்டு, என்னுரையை மட்டும் ஆண்களின் பக்கம் நின்று எழுதியதாகத் தோன்றுகிறது.
​பதற்றம் வரலாம் என்று கூறியிருந்தீர்கள்; ஆனால் எனக்கு விமலாவின் உணர்வைப் புரிந்து கொண்டதால் பரிதவிப்புதான் வந்தது. இக்கதை பலருக்குக் கிளுகிளுப்பு மூட்டலாம் என்பதையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒருவேளைச் சிலருக்கு அப்படி இருக்கலாம். ஆனால், பெண்மையின்றி எந்தவொரு மனிதனும் இந்த உலகில் வாழ்ந்திட முடியாது. சந்தர்ப்பவாதங்கள் தவறுக்கு வழிகோலலாமே ஒழிய, இந்த நாவலை வாசித்த எவருக்கும் பெண் பிள்ளைகள் மீது கரிசனமே வரும்.

​இக்கதை இன்னும் ஒருமுறை வாசிக்கத் தூண்டும் என்பதை ஆமோதிக்கிறேன். ஏனெனில், இது குறு நாவல் என்றாலும் கதையோட்டம் மிகவும் நுணுக்கமாகப் பின்னிப் பிணைந்துள்ளது. குறைவான கதாபாத்திரங்களே இருந்தாலும், அவர்களின் மனவோட்டத்தைத் தெள்ளத்தெளிவாக அறிந்துகொள்ள மீண்டும் ஒருமுறை வாசிக்கத்தான் வேண்டும்.
​"இந்தக் கதையின் சிறுமியைத் தேடுவீர்கள்" என்று சொல்லியிருந்தீர்கள். நிச்சயமாக இது போன்ற பெண் குழந்தைகள் (பாதிக்கப்பட்ட நிலையில்) உருவாகக் கூடாது. தன் உடலை நேசிக்கும் பண்பையே நாம் உருவாக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் வாழ்க்கையை முழுமையாக வாழ முடியும்; சாதிக்க முடியும். இந்த நாவலைப் பொறுத்தவரை, வாசிக்கும் பெண்களும் சரி, ஆண்களும் சரி, துணைக் கதாபாத்திரமான விஜியைத்தான் முன்மாதிரியாக எடுத்துக்கொள்வார்கள். அவளைத்தான் கதாநாயகியாகப் பார்க்க முடிகிறது. மாறாக, சிறுவயதில் பூப்படைந்து, உடல் மாற்றங்களால் சமூகத்தின் விஷமப் பார்வைகளுக்கு ஒரு பெண் இரையாவதை எப்படி விரும்ப முடியும்? அவளைத் தேடி என்ன பயன்? வேண்டுமானால் ஆறுதல் சொல்ல முடியும்.
​பெண் வாசகர்களிடம் நன்மதிப்பை இழக்க நேரிடும் எனச் சொல்லியிருக்கிறீர்கள். இதை நான் முதலில் மறுத்தேன், ஆனால் விமர்சனம் என்று வந்த பிறகு ஆதரிக்கிறேன். ஏனெனில், யாரும் தொடத் தயங்கும் பக்கங்களை நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். நிச்சயமாக இந்தப் பக்கங்கள் பெண்மைக்கு நம்பிக்கையாக இருந்திருக்க வேண்டும். ஆதரவாக இருப்பது வேறு, நம்பிக்கையாக இருப்பது வேறு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். நிச்சயமாக நீங்கள் பெண்களின் மனதைப் புரிந்துகொண்ட எழுத்தாளர்தான் என்பதை, 'எதிர்ப்புணர்வின் குறியீடு' என வாழ்த்துரை வழங்கியுள்ள கவிதா முரளிதரன் அவர்களின் பதிவிலேயே உணர்ந்து கொள்ள முடிகிறது.

​இக்கதையை 'ஆபாசம்' எனத் தூற்றலாம் என்ற எண்ணத்தையும் ஏற்க முடியாது. 11-வது அத்தியாயத்தில், சந்திரா டீச்சருடன் விமலா மருத்துவமனைக்குச் சென்று ஆலோசனை பெறும்போது கதை வேறு கோணத்தில் பயணப்படுமோ என்று பயந்தேன். விமலாவின் தந்தையைப் பற்றித் தெரிந்துகொள்ளும் நோக்கில் டீச்சர் கேட்கும் அடுக்கடுக்கான கேள்விகள், கதையைத் திசை திருப்பிப் பெண்ணியம் என்ற பெயரில் ஆண்களைக் கொச்சைப்படுத்தும் என்ற யூகத்தையும், ஒரு சமநிலை எழுத்தாளராகச் சிறப்பாகக் கையாண்டுள்ளீர்கள்.
​"சிலர் என்னைச் சந்தேகக் கண்கொண்டு பார்க்கலாம்" என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். இதுவும் நீங்கள் பெண்ணியம் பேசிவிட்டு, உங்களை ஒரு ஆண் எழுத்தாளராகக் காட்டிக்கொள்ள முயல்வதாகவே எண்ணுகிறேன். உங்கள் மனைவியுடன் நீங்கள் உரையாடியதையும் பதிவு செய்திருக்கிறீர்கள். ஆகவே, சந்தேகிக்க எதுவுமில்லை. மாறாக, உங்களின் பிற புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தையே இது தூண்டுகிறது.

​இந்தக் கேள்விகளுக்கான பதிலாக மட்டுமே எனது விமர்சனம் இல்லாமல், சில ஐயங்களையும் முன்வைக்கிறேன்:
​கதையின் தொடக்கத்தில் 'நான்' எனும் விமலாவையும் சந்திரா டீச்சரையும் சம வயதுடையவர்கள் என்றே நினைக்கத் தோன்றியது. சில பக்கங்களைக் கடந்த பிறகுதான் விமலா, சந்திராவின் மாணவி என்பதே புரிகிறது. விமலா விவரம் அறிந்தவளாக இருந்தபோதும், அவளுக்கு வாழ்வியல் நம்பிக்கையைக் கொடுப்பதற்குப் பதிலாக, ஏன் ஒரு தோழியைப் போல அவளின் எண்ணத்திற்கு உரமூட்டித் தீர்வு காண மருத்துவமனை, பியூட்டி பார்லர் என டீச்சர் அழைத்துச் செல்ல வேண்டும்?

​சந்திரா டீச்சரின் கணவர் தன் மனைவி இளமையாகத் தெரிய வேண்டும் என ஆசைப்படுகிறார். அது ஆண்களின் எண்ணமாக மட்டுமே இல்லை; பொதுவாகவே மனிதர்கள் தங்களை இளமையாகக் காட்டிக்கொள்ளவே விரும்புவார்கள். பிறகு ஏன் அதை ஆண் ஆதிக்கத்திற்குள்ளும், பெண்ணிய அடக்குமுறைக்குள்ளும் கொண்டு வர வேண்டும்? அடுப்படியிலேயே முடங்கும் பெண்கள் தாங்களாகவே முன்வந்து உடற்பயிற்சி செய்வதும், ஆரோக்கியமாகவும் இளமையாகவும் இருக்க ஆசைப்படுவதும் நியாயமானதுதானே?
​குட்டி ரேவதியின் "முலைகள்" புத்தகத்தைத் தேடியெடுக்கும் விமலா, அதிலிருந்த ஒரு கவிதையை வாசித்ததாகக் குறிப்பிட்டிருந்தீர்கள். அவளின் எண்ணப்படிப் பார்த்தால், அந்தப் புத்தகத்தை முழுமையாகப் படித்து, "பெரிய மார்பகம் என்பது குறையல்ல, அது இயற்கையான எதார்த்தம்; நம்மைப் போலப் பலர் இருக்கிறார்கள்" என்றல்லவா அவள் நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும்?

​சிறுவயதுப் பூப்பை எப்படி எதிர்கொள்கிறோமோ, அதுபோலவே உடல் மாற்றங்களையும் அணுக வேண்டும். சுஜியின் நிலையைத் தங்கை விஜியை வைத்துச் சிறப்பாகக் கையாண்ட நீங்கள், விமலாவிற்குத் தோழியாக அமைந்த சந்திரா டீச்சர் மூலம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. மாறாக, வீரத் தாயின் வரலாறு (முலையை அறுத்த கதை), திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் முலை வரி, விமலாவின் பாட்டிமார்களின் வரலாறு என அனைத்தும் அந்தச் சிறுமியின் நெஞ்சில் விஷமாக விதைக்கப்பட்டு, அதை அறுவடை செய்வது போலத்தான் கதை முடிகிறது.

இந்தச் சமூகத்தில் பெண்களின் உடலை வைத்து நடக்கும் அரசியலும் கொடூரங்களும் அதிகம். அதைக் களைவதுதான் சிறந்த படைப்பாக இருக்க முடியும். வலிகளைப் பதிவு செய்ய முனைந்த எழுத்தாளர், அதற்கான தீர்வையும் (முடிவையும்) வலியாகவே முடித்திருப்பதை ரசிக்க முடியவில்லை. இருப்பினும், பல இடங்களில் பெண்ணிய உணர்வுகளை நேரடியாக வெளிப்படுத்தியிருப்பதால், இதையொரு நல்ல பெண்ணியப் படைப்பாகவே பார்க்க முடிகிறது. அனைவரும் வாசிக்க வேண்டிய படைப்பு இந்த "கொங்கை".
​"முலைகள் என்பது எஜமானர்கள் தொழிலாளர்களிடம் பார்ப்பது; கொங்கை என்பது தொழிலாளர்கள் தன் எஜமானிகளிடம் காண்பது. பார்ப்பது, காண்பது இரண்டும் ஒரே பொருளைத் தந்தாலும், நுணுக்கமான வேறுபாடு இருக்கவே செய்கிறது" என்ற தெளிவை உங்கள் என்னுரையில் தந்தது போலவே கதையோட்டத்திலும் கொடுத்திருந்தால், இது ஒரு உலகத்தரம் வாய்ந்த படைப்பாக மாறியிருக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. அதேவேளையில், திருமதி கவிதா முரளிதரன் அவர்களின் முன்னுரை இந்தப் புத்தகத்திற்கான 'பெரும் நம்பிக்கை'.

நன்றி - எஸ். உதயபாலா




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்