ஆங்கரை பைரவி இது சத்தியம்

 எழுத்தாளர் ஆங்கரை பைரவி நேற்று அழைத்தார். அப்பொழுது எனது நிமிடங்கள் பாம்பன் பாலத்தின் மீது ஊர்ந்துகொண்டிருந்தது. ரயிலிலிருந்து கடலின் அலையையும் அதன் நீலத்தையும் வெறும் கண் கொண்டு பார்க்கவும் கேமரா கண் கொண்டு பார்க்கவுமாக இருந்தேன். கடல் எனக்குப் புதிது அல்ல. விமானத்திலிருந்து கடலைப் பார்த்திருக்கிறேன். படகிலிருந்தும் பார்த்திருக்கிறேன். ரயிலிலிருந்து பார்த்ததில்லை. நமது ஆங்கரை தானே பிறகு பேசலாமென்று துண்டித்து ரயில் கடலைக் கடந்ததும் அழைத்தேன். எடுத்ததும் சிரித்தார். இவர் சிரிக்கிறார் என்றால் வணக்கம் சொல்கிறார் என்று பொருள்.

"சொல்லுங்க தோழர் " என்றேன். தோழா,  அண்டனூர் ராஜமாணிக்கம் நீங்களா?" என்றார்.

"ஆமாம் தோழர். என்ன விசேசம் என்றேன்?"

"பழைய இதழ்களைப் புரட்டினேன்.  பாக்யா இதழில் இந்த பெயரில் ஒரு கதை வந்திருக்கிறது.  கதையின் பெயர் 'இது சத்தியம்' என்றார். 

"ஆமாம் தோழர், ராஜமாணிக்கம் , அண்டனூர் இராஜமாணிக்கம், அண்டனூர் சுரா.மாணிக்கம், திருராஜபதிமாணிக்கம், சுரா. மாணிக்கம் இவ்வளவு பெயரில் எழுதிதான் அண்டனூர் சுராவுக்கு வந்தேன்" என்றேன்.

" ஆமாம் தோழா,  ஓர் எழுத்து எவ்வளவு தூரம் எப்படியெல்லாம் கடந்து வர வேண்டியிருக்கிறது" என்பதாகச் சிரித்தார். 

" கதையை அனுப்புங்கள் தோழர் " என்றேன்.  

" ஒரு பக்கம் அனுப்பியிருக்கிறேன்.  முழு கதையையும் அனுப்பி வைக்கிறேன் " என்றார்.

வாட்ச் அப்பில் கதை வந்திருந்தது. டிசம்பர் 3-9, 2004 நாளிட்ட பாக்யா இதழ் இது. கதையை வாசித்தேன். மர்மம், புலனாய்வு கதையை எப்படி எழுத வேண்டும் என்று தெரியாமல் எழுதியிருந்தேன். இக்கதை எழுதிய தருணம் நினைவுக்கு வந்தது. 

அப்பொழுது நான் ராஜேஸ்குமார் கதைகளை வாசித்துக்கொண்டிருந்த காலம். அவரது ஊமத்தம்பூ எனும் நாவலை வாசித்து இந்தச் சிறுகதையை எழுதினேன். நாவலில் கணவன் இறப்புக்கு மனைவி காரணமாக இருப்பார். இந்தக் கதையில் மருமகள். 

இக்கதை பிரசுரமான பாக்யா இதழை தபால்க்காரர் எனது ஊராரிடம் கொடுத்து சேர்த்துவிடச் சொல்லி கொடுக்க இதழை வாங்கியவர் அதைப் பிரித்து வாசித்துவிட்டு சொன்ன விமர்சனம் எனது நினைவுக்கு வந்தது. "கதையில் சடகோபன் நாயகன், அவரது மனைவி பாத்திமா முஸ்லீம்,  அவரது மகன் அலெக்ஸ் கிருஸ்தவம். அவரது மனைவி சத்யா ஓர் இந்து.  கதை நல்ல கதை. கதைமாந்தர்கள் குழப்புகிறார்கள் " என்றார். இந்த விமர்சனம் மூலம்தான் ஒரு கதைக்குச் சூட்டப்படும் கதைமாந்தர் பெயர்கள் எந்தளவிற்கு தருக்கம் ரீதியாக பொருத்தமாக இருக்க வேண்டும் என்பதை நான் உள்வாங்கிக்கொண்டேன். நான் தொடக்கத்தில் எழுதிய முதல் ஐந்து சிறுகதைகளில் ஒன்று இது.

இது ஆங்கரை பைரவியால் நேற்று நிகழ்ந்தது.

இன்று புதுக்கோட்டை தமிழ்ச்சங்கம் நடத்திய மூன்றாம் ஆண்டு  இலக்கிய நூல் போட்டிக்கான முடிவு வெளியானது. சிறுகதை பிரிவில் ஆங்கரை பைரவியின் 'கோணவாச்சி' எனும் சிறுகதைத் தொகுப்பு சிறந்த சிறுகதை நூலாக தேர்வு  பெற்றிருந்தது. இந்தாண்டு வெளியான பட்டியலில் எனக்கு நன்கு பரிச்சயமான படைப்பாளர் இவர் ஒருவராகவே இருந்தார். மற்றவர்களில் சிலரைத் தெரியும் என்றாலும் நெருங்கி பழகியதில்லை. 

சற்றுமுன் ஆங்கரையை அலைபேசியில் அழைத்து வாழ்த்துகள் தெரிவித்தேன். வாழ்த்துகளை ஏற்றுக்கொண்ட அவர், "உங்கள் வாக்குப் பலித்திருக்கிறது" என்றார்.

"புரியவில்லை" என்றேன்.

" இந்த நூலுக்கான அட்டைப்படத்தை முகநூலில் பதிவிடுகையில், 'வரும்  ஆண்டு நீங்கள்தான்' என்று வாழ்த்து பதிவிட்டதை நினைவுகூர்ந்தார். 

"எனக்கு நினைவில்லை தோழர். இந்தச் சிறுகதை தொகுப்பை வாசித்து விடுகிறேன்" என்றேன்.

இன்றைய வாழ்த்து செய்தியில் மேலும் ஒரு செய்தியைச் சொன்னேன். நீங்கள் எழுதிய சிறுகதைகளில் 'அப்பா' என்கிற சிறுகதை எனக்குப் பிடித்தமானது. எதிர்காலத்தில் இக்கதை கல்லூரி பாடத்திட்டத்தில் நிச்சயம் இடம்பெறும்" என்றேன். 

"அப்படியா தோழர்?" என்றார். 

"இது சத்தியம்" என்றேன்.

அவர் அகமகிழ்ந்தார், 'இது சத்தியம்' அவர் எனக்கு அனுப்பி வைத்த எனது சிறுகதை தலைப்பிலிருந்தே இதை நான் சொன்னேன்.


05.03.2026 நேரம் - 7.41







கருத்துகள்

பிரபலமான இடுகைகள்