இந்தியா, தமிழ்நாடு இரண்டிற்குள்ளுமிருக்கும் ஒரே ஊர்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் புனல்குளம் என்றோர் ஊர் இருக்கிறது. ஒரு காலத்தில் காடாக இருந்த நிலப்பகுதி இது. முல்லை நிலம் நீர்நிலைக்கு புனல்குளம் என்று பெயர். இவ்வூர் புதுக்கோட்டை மாவட்டம் என்றாலும்  தஞ்சாவூர் நகரத்தையொட்டி உள்ளது. 

இவ்வூரில் பிறந்த ப.குமார் அவர்கள் அதிமுக கட்சியின் சார்பில் திருச்சிராப்பள்ளி நாடாளுமன்ற உறுப்பினராக இருமுறை  தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு இதே ஊரைச் சார்ந்த எம்.சின்னத்துரை அவர்கள் திமுக கூட்டணி இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸிட்) கட்சி சார்பில் நிறுத்தப்பட்டு சட்டமன்ற உறுப்பினரானார். இவர் மக்களால் எம்.சி என்று அழைக்கப்படக்கூடியவர். 

இந்த முறை இந்த ஊருக்கு இரட்டை லாட்டரி அடித்திருக்கிறது. ஒரே குடியிருப்பில் இரண்டு பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள். 

திமுக கூட்டணி அதிமுக - பாஜக கூட்டணியை டெல்லி கூட்டணியாகப் பார்க்கிறது. தமிழ்நாடா? டெல்லியா? என்றே திமுக கட்சி  இத்தேர்தலைச் சந்திக்கிறது.

அப்படியென்றால் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) சார்பில் நிறுத்தப்பட்டிருக்கும் எம்.சின்னத்துரை அவர்கள் தமிழ்நாட்டிற்குட்பட்ட புனல்குளம் எனும் ஊரில் பிறந்தவராகவும் பாஜக கட்சி சார்பில் நிறுத்தப்பட்டிருக்கும் எம்.சி.உதயக்குமார் அவர்கள் இந்தியாவிற்குட்பட்ட புனல்குளம் எனும் ஊரைச் சேர்ந்தவராகவும் பார்க்கப்படுகிறது. 

இருவரின் வெற்றியைத் தீர்மானிக்கப் போவது தவெக கட்சி சார்பில் நிறுத்தப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியம் பெறும் வாக்குகளே! இவர் பெறப்போகும் வாக்கை குறைத்து மதிப்பிட முடியாது. 

இதற்கிடையில் இதே ஊரைச் சேர்ந்தவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ப.குமார் அவர்கள் அதிமுக வேட்பாளராக திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் நிறுத்தப்பட்டிருக்கிறார். இதன்மூலம் தமிழக ஊர்களில் புனல்குளம் பிழைத்துக்கொள்ளும் ஊராக திகழ்கிறது.

இந்த ஊருக்குக் கிடைத்த யோகத்தைப் பெரிய அதிசயமாக ஒருவரிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். அவர் சொன்னார், " இதென்ன பெரிய அதிசயம், இப்படியான அதிசயம் இதற்கு முன்பு பல ஊர்களில் நிகழ்ந்துள்ளது. இப்போதைக்கு ஒரே அதிசயம் என்ன தெரியுமா?  ஒரே குடும்பத்திலிருந்து மூன்று பேர் மூன்று கட்சிகளின் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பதுதான்" என்றார். பிழைக்கத் தெரிந்த குடும்பம்!





கருத்துகள்

பிரபலமான இடுகைகள்