இரு முறை பரிசும் நிறைவும்
இராம.செ.சுப்பையா நினைவாக நடத்தப்படும் நாவல் போட்டி இந்த ஆண்டும் அறிவித்திருக்கிறார்கள். உரூபாய் ஐம்பதாயிரத்தை இரு நாவல்களுக்குப் பகிர்ந்து கொடுக்கவிருக்கிறார்கள். இந்த நாவல் போட்டியில் இரு முறை தொடர்ந்து பரிசு பெற்றவன் என்கிற முறையில் சொல்கிறேன். இந்தப் போட்டி, தேர்வு முடிவு, பரிசளிப்பு விழா யாவற்றையும் நான் என் இதயத்திற்கு நெருக்கமாக உணர்ந்து வருகிறேன். தேர்வுக்குப் பிறகு நாற்கரம் பதிப்பகம் வழியே வெளிவரும் நூல் கட்டமைப்பு மற்றும் நூலாக்கம் நல்ல கவனம் பெறும். இந்த நாவல் போட்டியின் சிறப்பாக நான் கருதுவது இதைத்தான்.
கடந்த ஆண்டு பரிசு பெற்ற வேங்குடிவயல் எனும் நாவல் குடிநீர்த் தேக்கத் தொட்டியில் மலம் கலந்த குரூரச் சம்பவத்தை மையமாகக் கொண்டு எழுதினேன். விலங்கு, பூச்சி, பறவைகள் கொண்டு எழுதப்பட்ட குறியீட்டு நாவல் இது. இந்த நாவலுக்கு மூன்றாம் பரிசு கிடைத்தது.
சென்ற ஆண்டு பரிசு பெற்ற உப்பிலிக்குடி எனும் நாவல் புதுக்கோட்டை சமஸ்தான அரசாக இருந்த காலத்தில் உப்பு மண்ணிலிருந்து மண் உப்பு காய்ச்சிக்கொடுத்தவர்களின் வாழ்வையும் அவர்களின் கையறு நிலையையும் கதையாக்கினேன். முதல் பரிசு கிடைத்தது.
இந்த ஆண்டு இப்போட்டியில் நான் கலந்துகொள்ள போவதில்லை. போதும் என்கிற மனநிறைவோடு வேறொரு எழுத்துக்கும் எழுத்தாளருக்கும் இந்தப் பரிசு கிடைக்க வேண்டுமென ஆவல்கொள்கிறேன்.
நாவல் போட்டியில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் பரிசுக்காக நாவல் எழுத வேண்டாம். அப்படியாக எழுதுவது எழுத்தும் ஆகாது. எழுதிய நாவல் கைவசமிருந்தால் அந்த நாவலைச் செப்பனிட்டு அனுப்புங்கள். இந்த போட்டிக்கென்று எழுதும் நாவலை அடுத்தாண்டு போட்டிக்கும் அல்லது இதேபோன்று வேறொரு போட்டிக்கும் அனுப்ப வைத்துக்கொள்ளுங்கள்.
படைப்புகளைப் பரிசுகள் தீர்மானிப்பதில்லை. பரிசுக்காக எழுதுபவன் எழுத்தாளனும் இல்லை. தான் படைக்கும் நூல்களை வாசித்து சத்தமில்லாமல் கடந்துபோகும் மௌன தமிழிலக்கிய களத்தில் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்த, அங்கீகரிக்க, அடையாளப்பட இதுபோன்ற பரிசுகளும் விருதுகளும் தேவை. இதைவிடவும் முக்கியமானது இந்தப் போட்டிக்கு எழுதுவதன் மூலம் தமிழுக்கு ஒரு நாவல் கிடைக்கிறது. போட்டி விபரம் முதல் இடுகையில் பகிர்ந்துள்ளேன். வாழ்த்துகள்


.jpg)



கருத்துகள்
கருத்துரையிடுக