பாக்யா - புகழஞ்சலி

 தாமத பதிவு - பாக்யா


திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் அவர்களின் மரணத்திற்கு அஞ்சலி பதிவு ஏன் எழுதவில்லை என்று எழுத்தாளர் தோழர் ஆங்கரை பைரவி கேட்டார்.

பாக்யராஜின்  திடீர் மரணம் என்னை பெரியளவு பாதித்தது அதனால் இரங்கல் எழுதவில்லை என்றேன். அதையே அவரும் சொன்னார்.

கே. பாக்யராஜ் அவர்கள் சினிமா துறையில் பலருக்கு எப்படி அவர் முன்மாதிரியாகவும் வழிகாட்டியாகவும் இருந்துள்ளாரோ அப்படியாக எழுத்துத்துறையிலும் இருந்துள்ளார்.

எழுத்தாளர் பலரை அறிமுகப்படுத்தியதில் இவரது பங்கு அளப்பரியது. எனது முதல் சிறுகதை பாக்யா இதழில்தான் வெளிவந்தது. பறையொலி. கதையோடு கதைக்கான சன்மானம் ரூபாய் 100 இம் வந்தது. இக்கதையைத் தொடர்ந்து பல கதைகள் நான் பாக்யா இதழில் எழுதியிருந்தாலும் எனது முதல் படைப்பை வெளியிட்ட பாக்யா இதழை நான் ஒரு காலமும் நினைவுகூர மறந்ததில்லை. கொரானா காலத்தையொட்டி பாக்யா இதழ் நின்று விட்டது.  இதற்காக யாரும் வருத்தப்படவோ கவலைப்பட்டதாகவோ தெரியவில்லை. ஆனால் இந்த இதழை தொடர்ந்து நடத்திய கே.பாக்யராஜ் மரணம் என்னை போன்ற பல எழுத்தாளர்களை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது.

'பாக்யா' கேள்வி பதில் வாசிப்பதற்கென்றே அந்த இதழை வாங்கியிருக்கிறேன். ஒரு கேள்வி பதிலுக்கு இப்படியாக பதில் சொன்னார்,

கேள்வி -
அழகான பொய் எது?  அழகில்லாத உண்மை எது?

பதில் -
இரண்டு கேள்விக்கும் பதில் ஒன்றுதான். மரணம்.

இதுதான் கே.பாக்யராஜ் அவர்களுக்கு நிகழ்ந்துள்ளது. நிகழ்த்தியுள்ளது.

ஆழ்ந்த புகழஞ்சலி பாக்யா!!




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்