சிறுகதை தமிழிலக்கியத்தில் பின்தங்கி உள்ளதா?


இலங்கை கொழும்பு நகரிலிருந்து வெளிவரும் இதழ்களில் ‘ஞானம் – கலை இலக்கிய சஞ்சிகை’ முக்கியமானது. இந்த இதழை நான் தொடர்ந்து வாசித்தும் கவனித்தும்  வருகிறேன். கவிதை, கட்டுரை, சிறுகதை இலக்கியங்களில் தொடர் பங்களிப்பு செய்து வருகிறது. இதழ் ஜுன், 2026 இல் 27 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த இதழ் ‘தமிழ்ச் சிறுகதைகளின் தேக்க நிலை’ எனும் தலைப்பில் ஒரு தலையங்கம் எழுதியுள்ளது. இதில் சமீப காலத்திய சிறுகதை தேக்க நிலை குறித்து கவலை தெரிவித்துள்ளது. தமிழ்ச் சிறுகதைகளை வளப்படுத்த பலராலும் காலங்காலமாக முன்வைக்கப்பட்ட கருத்துகள் சிலவற்றை வினாக்களாக தந்துள்ளது. இந்தக் கேள்விகள் புதிதாக சிறுகதைகள் எழுத வருகிறவர்களுக்கும் எழுதிக் கொண்டிருப்பவர்களுக்கும் தங்களை இன்னும் கூர்த்தீட்டிக்கொள்ள உதவுமென்று நம்புகிறேன். அந்த இதழ் தொடுத்துள்ள கேள்விகளை அப்படியே தருகிறேன்.

1.    கதை பொருத்தமான இடத்தில் தொடங்கியுள்ளதா?

2.    ஒவ்வொரு சொல்லும் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வாக்கியங்கள் தெளிவாகக் கட்டமைக்கப்பட்டுள்ளனவா?

3.    உரையாடல்கள் பாத்திரங்களுடன் பொருந்தி இயல்பாக அமைந்துள்ளனவா?

4.    தேவையற்ற பத்திகள், வாக்கியங்கள், உரையாடல்கள் அல்லது சொற்கள் இடம் பெற்றுள்ளனவா?

5.    ஏதேனும் கருத்து, சம்பவம், செய்தி அல்லது அறிவுரை வலிந்து புகுத்தப்பட்டுள்ளதா?

6.    நிகழ்வுத் தொடர்ச்சியில் மாறுபாடுகள், முரண்பாடுகள் அல்லது தெளிவின்மைகள் உள்ளனவா?

7.    வாசகனுக்குத் தொய்வு அல்லது சலிப்பு ஏற்படுத்தக்கூடிய பகுதிகள் உள்ளனவா?

8.    கதையின் மையப்பொருள் – கரு சிதைவடைந்துள்ளதா?

9.    கதை முடிந்த பின்னரும் அதன் கருத்து அல்லது உணர்வு வாசகனின் மனதில் நிலைத்திருக்குமா?

10    அனைத்தும் வெளிப்படையாகவே கதையில் கூறப்பட்டுள்ளதா?

இப்பட்டியல் ஓர் உதாரணம் மாத்திரமே. இவ்வாறான சில சுயவினாக்களை எழுப்பி தமது படைப்புகளைச் செப்பனிடலாம். கதைகளை வாசித்து முடித்ததும் அவை கொண்டுள்ள கரு, கதைக்களம், கூறும் முறை, அமைப்பு, வசன அமைப்பு, சொற்பிரயோகங்கள், கூறியனவற்றால் கூறாதன கூறல் என ஏதாவதொன்றாவது வாசகனைச் சிந்திக்க வைக்க வேண்டும். மனதை அலைந்துழல் நிலைக்குத் தள்ள வேண்டும். தமிழ்ச் சிறுகதைகளின் தரத்தினை மேம்படுத்த முயலுவோம் என்று இத்தலையங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்